

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் 450 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், விரல் ரேகை மூலம்6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியை அடையாளம் கண்ட போலீஸாருக்கு சென்னை காவல்ஆணையர் பாராட்டுத் தெரிவித்தார்.
2016-ல் கோட்டூர்புரத்தில் பூட்டிய வீட்டில் 450 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். எனினும், வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், இந்த வழக்கு கடந்த ஆண்டு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, சென்னை விரல் ரேகை பிரிவினர், சம்பவ இடத்தில் கிடைத்த 10 விரல் ரேகைப் பதிவுகளைக் கொண்டு, தமிழகம் முழுவதும் நடைபெற்ற திருட்டு குற்றங்களில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் விரல் ரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதில் எந்த விரல் ரேகைகளும் ஒத்துப்போகாததால், விரல் ரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் மேசையா அருள்ராஜ், எஸ்.வினோத் ஆகியோர், தேசிய விரல்ரேகை பதிவுக் கூடத்தில் பராமரிக்கப்படும் NAFIS என்ற மென்பொருள் உதவியுடன், வெளி மாநிலங்களைச் சேர்ந்த குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
இதில், 450 பவுன் நகைகளைத் திருடிய வெளி மாநிலக் குற்றவாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குற்றவாளியை அடையாளம் கண்ட விரல் ரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இதேபோல, சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்த போலீஸாருக்கு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டுத் தெரிவித்தார்.