Published : 18 Feb 2023 08:56 AM
Last Updated : 18 Feb 2023 08:56 AM

மது போதையில் ஓட்டி வந்ததால் வாகனம் பறிமுதல் - அன்பகம் ஊழியர் தற்கொலை

சென்னை

மது போதையில் ஓட்டி வந்ததால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், விரக்தியடைந்த ‘அன்பகம்’ ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை, எம்ஜிஆர் நகர், கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நிசாந்த் (24). தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலைபார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்தான் இவருக்குத் திருமணம் ஆனது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது விருந்தில் கலந்து கொண்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். இரவு 11.30 மணியளவில் ஈக்காட்டுத் தாங்கல் தாண்டி காசி தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எம்ஜிஆர் நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் பார்த்திபன் மற்றும் காவலர் கார்த்திக் ஆகியோர் நிசாந்த்தை நிறுத்தி விசாரித்தனர்.

ரூ.10 ஆயிரம் அபராதம்

அப்போது, நிசாந்த் மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவருக்குரூ.10ஆயிரம் அபராதம் விதித்த போலீஸார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அபராதத் தொகையை செலுத்திவிட்டு வாகனத்தைப் பெற்றுக்கொள்ளும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

இதனால் நிசாந்த் சோகத்துடன் வீடு திரும்பினார். நள்ளிரவு வீட்டுக்குவந்த நிசாந்த் இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்த விவரத்தை மனைவியிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு மனைவி அப்ரின் தூங்கிவிட்டார்.

போலீஸார் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் மனவேதனையில் இருந்த நிசாந்த் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகாலையில் அப்ரின் எழுந்து பார்த்தபோது கணவர் நிசாந்த் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறித் துடித்தார்.

தகவல் அறிந்து எம்ஜிஆர்நகர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து நிசாந்த் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x