மாமல்லபுரம் அருகே தம்பதி கொலை: தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை

சகாதேவன், ஜானகி
சகாதேவன், ஜானகி
Updated on
1 min read

மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி பகுதியில் ஈசிஆர் சாலையையொட்டி அமைந்துள்ள முந்திரிதோப்பில் வசித்து வந்த தம்பதி, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி கிராமப் பகுதியில் ஈசிஆர் சாலையையொட்டி உள்ள முந்திரிதோப்பில் சகாதேவன்(92) - ஜானகியம்மாள்(82) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி அருகில் உள்ள ஊர்களில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், இவர்கள் மட்டும் முந்திரிதோப்பில் குடில் அமைத்து வசித்து வந்துள்ளனர்.

இவர்களை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பிள்ளைகள் வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கம் என தெரிகிறது. இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டுக்கு மகன்கள் வந்தபோது சகாதேவன் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தெரிந்தது. மேலும், தாயார் காணவில்லை எனக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சகாதேவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, காணாமல் போனதாக கூறப்பட்ட தாயாரை மகன்கள் முந்திரிதோப்பில் தேடியுள்ளனர். அப்போது, இன்று காலை ஒரு புதரின் அருகே ஜானகி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடப்பது தெரிந்தது. மேலும், அவரது உடலில் இருந்த சுமார் 5 பவுன் தங்க நகைகள் மாயமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி.பிரதீப் நேரில் பார்வையிட்டார். பின்னர், போலீஸார் அப்பகுதியில் தடயங்களை சேகரித்தனர்.

மேலும், உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள டிஎஸ்பி ஜகதீஸ்வரன் தலைமையில் ஆய்வாளர்கள் ருக்மாங்கதன், ராதாகிருஷ்ணன் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தனிப்படை போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in