

அமுதசுரபி என்ற பெயரில் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அதன் தலைவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல்(67). இவர் தனது உறவினர்களான தங்கப்பழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோருடன் இணைந்து அழகாபுரத்தில், அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார்.
அதன் மூலம் சேலத்தைச் சேர்ந்த ஏராளமானோரிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி முதலீடு திரட்டினார். தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமுதசுரபி பெயரில் சங்கங்களை தொடங்கி, தனியாக ஏடிஎம் கார்டுகளை வழங்கி, வங்கிகள் முன்பு ஏடிஎம் மையமும் ஏற்படுத்தினர்.
இந்நிலையில், சேலம் அம்மாப்பேட்டை தங்கசெங்கோடன் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் (52) என்பவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில், அமுதசுரபி நிறுவனத்தில் அதிக வட்டி அளிப்பதாக முதலீடு செய்த நிலையில், வட்டி கொடுக்காமலும், முதிர்வு காலம் முடிந்து முதலீடு தொகை ரூ.2.92 லட்சம் வழங்காமலும் மோசடியில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள அமுதசுரபி சங்கங்களில் நடத்திய சோதனையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.58 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சங்கத்தின் தலைவராக செயல்பட்ட ஜெயவேல், இயக்குநர்களான தங்கப்பழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அமுதசுரபி நிறுவனத்தின் மீது பொதுமக்கள் ஏராளமானோர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சித்ராதேவி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் அயோத்தியாப்பட்டணத்தில் இருந்த ஜெயவேலுவை கைது செய்து, மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் அமுதசுரபி பெயரில் சங்கங்களை தொடங்கி, தனியாக ஏடிஎம் கார்டுகளை வழங்கினர்.