

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள நடு விக்கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டியன் (50). இவர் குடும்பத்துடன் காரைக்குடி சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு பூட்டிய வீட்டில் பாட்டு சத்தம் கேட்பதாக அக்கம், பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த பாண்டியன், வீட்டைத் திறந்து பார்த்த போது, பாத்திரங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒருவர் தனது செல்போனில் பாடல் கேட்டபடி மது போதையில் கட்டிலில் தூங்கியது தெரியவந்தது.
வீட்டின் பூட்டை உடைக்காமல் மேற்கூரை ஓட்டை கழற்றி உள்ளே புகுந்தது தெரிந்தது. அவர் ராமநாதபுரம் மாவட்டம் மேலச் சேந்தனேந்தலைச் சேர்ந்த சுதந்திர திருநாதன் (27) என தெரியவந்தது. கிராம மக்கள் அவரை நாச்சியாபுரம் போலீஸில் ஒப்படைத்தனர்.