

கிருஷ்ணகிரி: மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த புகாரில் கிருஷ்ணகிரி அருகே அரசு நிதியுதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே எலத்தகிரி பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் ராஜா (59), ஆய்வக உதவியாளர் நடேசன் (59) ஆகியோர் இரு மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவகாந்தி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் புகார் உறுதியானது. மேலும், இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர் ரகுராமன், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, ஆசிரியர் ராஜா மற்றும் ஆய்வக உதவியாளர் நடேசன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர். இதனிடையே, இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.