

சென்னை: அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வானகரம் கந்தசாமி நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (44). இவர், ஆலப்பாக்கம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 11-ம் தேதி காலை ஜெயராமன் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கல்லாவில் இருந்த பணம் திருடு போயிருந்தது. அதே பகுதியில் இருந்த மேலும் 2 கடைகளிலும் அடுத்தடுத்து பணம் திருடப்பட்டது.
இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர் திருட்டில் ஈடுபட்டது மதுரவாயல் தனசேகரன் நகரை சேர்ந்த சரவணன் (49) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சரவணன் மீது ஏற்கெனவே 6 வழக்குகள் உள்ளதும், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வெளியே வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.