Published : 17 Feb 2023 04:13 AM
Last Updated : 17 Feb 2023 04:13 AM

சென்னை: பிச்சைக்காரர் வேடத்தில் பின் தொடர்ந்து மனைவியை பிளேடால் வெட்டிய பேராசிரியர் கைது

சென்னை: பிச்சைக்காரர் வேடமிட்டு மனைவியை பின் தொடர்ந்து சென்று பிளேடால் முகத்தில் வெட்டிய நந்தனம் கலைக் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (56). சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றி வந்தார். எழும்பூரில் பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு ஒன்றில் மனைவி ஜெயவாணி (36) மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

ஜெயவாணி, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வருகிறார். ஜெயவாணி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரை குமாரசாமியே படிக்கவைத்துள்ளார். பின்னர், அவரையே 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் 20 வயது வித்தியாசம். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் குமார சாமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு குமாரசாமி, பிச்சைக்காரர் போல வேடமிட்டு மனைவியை பின் தொடர்ந்துள்ளார். பணி முடிந்து வந்த ஜெயவாணி, வீட்டருகே ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அங்கு சென்ற குமாரசாமி, மறைத்து வைத்திருந்த பிளேடால் ஜெயவாணி முகத்தில் சரமாரியாக கிழித்து விட்டு தப்பி ஓடினார். அங்கிருந்தவர்கள் ஜெயவாணியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் எழும்பூர் காவல் ஆய்வாளர் திருமால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்.

முதல் கட்டமாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஜெயவாணியை ஒரு பிச்சைக்காரர் தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சியை காட்டி, ஜெயவாணியிடம் போலீஸார் விசாரித்தனர். அந்த பிச்சைக்காரர் தனது கணவர்போல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குமாரசாமியை பிடித்து விசாரித்தபோது மனைவியை தாக்கியதை ஒப்புக்கொண்டதால் அவரை கைது செய்தனர். போலீஸாரிடம் குமாரசாமி கூறும்போது, ‘‘எனக்கும் மனைவிக்கும் 20 வயது வித்தியாசம். மனைவி வேறு ஒருவரது நட்பில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. அவரது நகைகள் சிலவற்றை காணவில்லை.

இதுகுறித்து கேட்டபோது நண்பர் ஒருவருக்கு கொடுத்து விட்டதாக தெரிவித்தார். இதனால், அவர் என்னை விட்டுவிட்டு வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்வாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது. முக அழகை கெடுத்து விட்டால் அவர் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்பதற்காக தாக்கினேன். அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக மாறுவேடத்தில் சென்றேன்’’ என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x