

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஏழ்மையை பயன்படுத்தி ஆன்லைனில் பெண்களிடம் பாலியல் சுரண்டலில் ஈடுப்பட்ட 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னை அஞ்சுகம் நகரில் ஆன்லைனின் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக கும்பகோணம் மேற்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு, காவல் துணை கண்காணிப்பாளர் பி.மகேஷ்குமார் மேற்பார்வையில், மேற்கு காவல் ஆய்வாளர் பேபி மற்றும் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீஸார், அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்குள்ள ஒரு வீட்டில் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடைபெற்று வந்ததையறிந்து, அங்கிருந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்து, அங்கிருந்த 2 பெண்கள் மீட்டு, அவர்களிடமிருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம், 3 இருசக்கர வாகனங்கள், 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், சோழபுரத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (39), பைராகித் தோப்பைச் சேர்ந்த ரம்யா (26) மற்றும் முருக்கங்குடியைச் சேர்ந்த பிரேமி (25) ஆகிய 3 பேரும், அப்பகுதியிலுள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து, குடும்பம் நடத்துவதுபோல் இருந்து கொண்டு ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் செய்துள்ளனர். இவர்கள், ஏழ்மையிலுள்ள இளம்பெண்கள், ஆடம்பரத்திற்காக வாழும் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறிய இதில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
தொடர்ந்து 3 பேர் மீது வழக்கு தொடர்ந்து, பரமேஸ்வரனை கும்பகோணம் கிளைச் சிறையிலும், மற்ற 2 பேரை திருவாரூர் சிறையிலும் அடைத்தனர். மீட்கப்பட்ட சிதம்பரத்தைச் சேர்ந்த 2 பேரை, தஞ்சாவூரிலுள்ள பெண்கள் காப்பகத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.