

தாம்பரம்: தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம், கே.கே.நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (52). இவருடைய மனைவி ஜனகா இருவரும் வண்டலூர் அடுத்த ஓட்டேரி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே மீன் கடை நடத்தி வந்தனர். கடந்த 13-ம் தேதி காலை காரில் வந்த ஒரு கும்பல், பார்த்திபன் மற்றும் ஜனகாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீஸார் கொலையில் தொடர்புடைய மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரசாத், ஆஜய் (எ) பப்புலு, பிரதீப், தினேஷ் (எ) லியோ, தனுஷ்குமார் (எ) குமார், கருப்பு, பிரவீன் (எ) விக்கி ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
பார்த்திபனின் 15 வயது மகளுக்கு மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரேம்குமார் செல்போன் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் கடந்த டிசம்பரில் பார்த்திபனின் மகள், பிரேம்குமாரை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து ஆரம்பாக்கத்தில் வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழிக்கு பழியாகவே இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.