வேலூர் | வங்கி கணக்கில் விவரங்களை பதிவு செய்த பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் துணிகர திருட்டு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

வேலூர்: ‘ஆன்லைனில்’ வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்த கல்லூரி பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.13 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடியது குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். உடல் நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, அவரது செல்போனில் தனியார் கடன் வழங்கும் செயலியை இயக்கிய போது செயல்படவில்லை.

இதனால், கடன் செயலியின் உதவி எண்ணை தொடர்புகொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசியவர்கள் அனுப்பிய இணையதள முகவரி ஒன்றில் வங்கி கணக்கு குறித்த விவரங்களை பூர்த்தி செய்யுமாறு கூறினர். அதன் பேரில், தனது வங்கி கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களை பேராசிரியர் பதிவு செய்துள்ளார்.

அதன்பிறகு அடுத்தடுத்த நான்கு நாட்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.13 லட்சத்து 15 ஆயிரம் பணம் திடீரென காணாமல் போனது. இதனால், அதிர்ச்சியடைந்த பேராசிரியர் வேலூர் சைபர் கிரைம் பிரிவில் பணம் திருடப்பட்டது குறித்து புகாரளித்துள்ளார். அதன் பேரில், சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ‘

‘இணையதளம் வழியாக யார் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டாலும் பதிவு செய்ய வேண்டாம்’’ என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in