Last Updated : 15 Feb, 2023 06:55 PM

24  

Published : 15 Feb 2023 06:55 PM
Last Updated : 15 Feb 2023 06:55 PM

விழுப்புரம் அருகே ஆசிரம நிர்வாகியின் மனைவி உட்பட மேலும் 3 பேர் கைது: பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்

கோட்டகுப்பம் அருகே அன்பு ஜோதி ஆசிரமத்தில் கிளையில் தங்கி உள்ளவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலியூர் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் முறைகேடு நடந்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரம நிர்வாகியின் மனைவி உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இந்த ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்த் துறையினரும் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவதும், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

இதனையடுத்து ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உட்பட 142 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படனர். இந்நிலையில், ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் பிஜூ மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத் உள்ளிட்ட 6 பேர் மீதும் அனுமதியின்றி ஆசிரமம் நடத்தி வந்தது, ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்தவர்களை வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநிலத்திற்கு கடத்தியது, ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோரை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தது உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் கெடார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரம பணியாளர்கள் 4 பேரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

குரங்கு தாக்கி காயமடைந்த ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது மனைவி மரியா ஜூபின் ஆகிய இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் அவர்கள் இருவரையும் கைது செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.

கைது செய்யப்பட்ட மரியா ஜூபின்

இதனிடையே, சிகிச்சை பெற்று வந்த மரியா ஜூபின் (42) இன்று பிற்பகலில் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனை வாசலிலேயே மரியா ஜூபினை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஆசிரம நிர்வாகிகளான தெலுங்கானா மாநிலம், ரெங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (35) , அய்யனம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (34) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர் சிகிச்சையில் இருந்து வரும் ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் நாளை டிஸ்ஜார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவரை கைது செய்ய கெடார் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 203 பேர்களில் 99 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 44 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் கள்ளகுறிச்சி திருவண்ணாமலை வளத்தி, கடலூர் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வளவு நடந்தும் எந்த ஓர் அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் இக்கொடூர செயல் குறித்து வாய்திறக்காமல் மௌனமானவே வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி என்ன? - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் சலீம்கான், அமெரிக்காவில் தொழில் புரிந்து வருகிறார். வயதான இவரது மாமா ஜபருல்லாவை, நண்பர் உதவியோடு, விழுப்புரம் அருகே குண்டலபுலியூர் கிராமத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில், 2021 டிசம்பர் 4-ம் தேதி சேர்த்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட்டில் ஊருக்கு வந்த சலீம்கான், ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட தனது மாமா ஜபருல்லாவைப் பார்க்க சென்றார். அவர் அங்கு இல்லை. ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபினிடம் கேட்டபோது, பெங்களூருவில் உள்ள ஓர் ஆசிரமத்தில் ஜபருல்லாவை சேர்த்துள்ளதாகக் கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்த போது, அங்கும் அவர் இல்லை.

இதையடுத்து சலீம்கான் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் துறையினர் வருவாய் துறையினருடன் இணைந்து கடந்த 10-ம் தேதி குண்டலபுலியூர் கிராமத்தில் உள்ள அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஆசிரமத்தில் இருக்க வேண்டிய 16 பேர் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த ஆதவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என 142 பேர் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை, விழுப்புரம் ஆட்சியர் பழனி நேற்று காலை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார். எஸ்பி ஸ்ரீநாதா, கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்கீதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “குண்டலபுலியூர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு ஆண் குழந்தை உட்பட 109 ஆண்கள், 33 பெண்கள் என மொத்தம் 142 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த இரு தினங்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 86 பேர் நலமுடன் இருக்கிறார்கள்.

அவர்களின் வீடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்படுவார்கள். மீதமுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வேறு இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த ஆசிரமத்தை உரிய அனுமதி யின்றி நடத்தியது உறுதியாகியுள்ளது. அங்கு தங்கியிருந்தவர்கள் சித்திரவதைக்கும், பாலியல் துன்புறுத் தலுக்கும் ஆளாகியுள்ளனர் என் பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி நடந்த ஆசிரமத்தை மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித் தார்.

இவ்வழக்கு தொடர்பாக எஸ்பி ஸ்ரீநாதா கூறுகையில், “பாலியல் வன்கொடுமை, அடைத்து வைத்து சித்திரவதை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காதது உள்ளிட்ட 13 பிரிவுகளில் 6 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. வழக்குகள் விசாரணை வெளிப்படை தன்மையாக நடைபெறும். இங்கு யாரும் மாயமாக வில்லை. ஆசிரமத்தில் குறப்பிட்டுள்ள பதிவேட் டின் படி அனைவரும் உள்ளனர். இங்கிருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டவர் அங்கு காணாமல் சென்றுள்ளார். இதுகுறித்து அம்மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். ஆட்கொணர்வு மனு மீது பெங்களூரு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x