

கோவை: கோவையில் திரையரங்கு தொடர்பான கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த சத்தியபாண்டி (31), கோவை விளாங்குறிச்சியில் தங்கியிருந்து, ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், பாப்பநாயக்கன் பாளையம் கருப்பக்கால் தோட்டம் பகுதியில் சத்திய பாண்டி கடந்த 12ம் தேதி மர்ம நபர்களால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, காவல் துணை ஆணையர் சந்தீஷ் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு காந்தி புரத்தில் பிஜூ என்ற இந்து முன்னணி உறுப்பினர் கொலை வழக்கில் சத்திய பாண்டி உள்ளிட்ட சிலர் கைது செய்யப் பட்டனர். இதற்கு பழி வாங்குவதற்காக சத்திய பாண்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என தனிப் படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கிடைத்த தகவல்கள் குறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சத்திய பாண்டி கொலை வழக்கில், கோவையைச் சேர்ந்த ரவுடியான சஞ்சய் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. வட கோவை பகுதியில் உள்ள திரையரங்க உரிமையாளருக்கும், குத்தகைக்கு எடுத்தவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாக சத்தியபாண்டியும், மற்றொரு தரப்புக்கு ஆதரவாக சஞ்சயும் இருந்துள்ளனர். இவ்விவகாரத்தை முடித்துக் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதால், இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. தவிர, நவஇந்தியா பகுதியில் உள்ள கல்லூரியில் மாணவர்களுக்கு இடையேயான கோஷ்டி மோதலில், இருவரும் எதிரெதிர் கோஷ்டிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.
தொடர்ந்து நடந்த இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து நிகழ்வுகளால் யார் பெரியவர் என்ற போட்டி சத்திய பாண்டிக்கும், சஞ்சய்க்கும் இடையே ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சஞ்சய் மற்றும் அவரது கூட்டாளிகள் சத்தியபாண்டியை கொலை செய்துள்ளனர். இவ்வழக்கில் சஞ்சய் தரப்பினர் பயன்படுத்திய துப்பாக்கி தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி மூலம் வட மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. சஞ்சய் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகிறோம்’’ என்றனர்.