Published : 15 Feb 2023 04:03 AM
Last Updated : 15 Feb 2023 04:03 AM
கோவை: கோவையில் ரவுடிகள் மீதான நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் கடந்த 12-ம் தேதி சத்தியபாண்டி என்பவர் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொல்லப்பட்டார். மறுநாள் நீதிமன்றம் அருகே ரவுடி கோகுல் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த கொலைச் சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாநகரில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து நடந்த இரு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் அடையாளங்கள் தெரிய வந்துள்ளன. ஒரு வழக்கில் 7 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. ரவுடிகளை ஒடுக்க சிறப்புத் தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 6 ரவுடி கும்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மற்ற கும்பல் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மாநகர காவல்துறையின் கணக்கின்படி 153 ரவுடிகளின் குற்றப்பதிவேடு ஆவணம் பராமரிக்கப் பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு சரவணம்பட்டியில் ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரவுடிகளின் மீதான நடவடிக்கை தொடரும். கோவை மாநகரம் ரவுடிகள் இல்லாத மாநகரமாக மாற்றப்படும். சமீபத்தில் திருவண்ணாமலையில் சில ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க காவல் துறையினர் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகரில் 446 ஏடிஎம் மையங்கள் உள்ளன. பலவற்றில் காவலாளிகள் இருப்பதில்லை. எனவே பகல், இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸார், ஏடிஎம் மையங்களையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT