

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ரூ.73 லட்சத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ஹரியானா மாநிலத்தில் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை, கலசப் பாக்கம் மற்றும் போளூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் 3 ஏடிஎம் மற்றும் ஒரு தனியார் வங்கி ஏடிஎம் என மொத்தம் 4 ஏடிஎம் இயந்திரயங்களில் இருந்து கடந்த 12-ம் தேதி அதிகாலை ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. காஸ் வெல்டிங் மூலமாக இயந்திரத்தின் பிரத்யேக பகுதியை பெயர்த்து, பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இதில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இதையடுத்து, டிஐஜி முத்துசாமி தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தடய அறிவியல் சோதனை மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளையர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலையில் இரண்டு நாட்களாக முகாமிட்டு வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஏடிஎம் கொள் ளையில் ஹரியானா மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இவர்களை பிடிக்க புதுடெல்லி, ஹரியானா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.
2 நாள் விசா ரணைக்கு பிறகு, சென்னைக்கு ஐஜி கண்ணன் திரும்பியுள்ளார். டிஐஜி முத்துசாமி, 3-வது நாளாக நேற்றும் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இரவு நேர ரோந்து பணியை சரியாக மேற்கொள்ளாத திருவண்ணாமலை, கலசப் பாக்கம் மற்றும் போளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு சக காவலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் கொள்ளையில் அடிமட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்பது ஒரு தலைபட்சமான செயல் என்றும், பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்களிடம் 2-வது நாளாக தனிப்படையினர் நேற்றும் விசாரணை நடத்தினர். ஏடிஎம் கொள்ளைக்கு பிறகு மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.