

சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை நன்கு திட்டமிட்டு நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில் நகைக்கடை ஷட்டரை துளையிட்டு, உள்ளே நுழைந்து 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் வைர நகைகளை கொள்ளையடித்தவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, பெங்களூரு, ஹைதராபாத்தில் முகாமிட்டு தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
இந்தச் சம்பவம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "திட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு இணை ஆணையர் மற்றும் 2 துணை ஆணையர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் துப்பு கிடைத்துள்ளது.
வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். சில புகைப்படங்கள் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த வண்டியில் வந்தார்கள், எந்த வண்டியில் தப்பிச் சென்றார்கள் என்பது தொடர்பாக துப்பு கிடைத்துள்ளது" என்று அவர் கூறினார்,