Published : 14 Feb 2023 04:15 AM
Last Updated : 14 Feb 2023 04:15 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டல புலியூர் கிராமத்தில் தனியார் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் குன்றியோருக்கான இல்லத்தில் இருந்து ஜபருல்லா என்பவர் மாயமானது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல் துறையினர் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கொண்ட குழுவினர் கடந்த 10-ம் தேதி ஆதரவற்றோர் இல்லத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது, அங்கு 130 ஆண்கள், 27 பெண்கள் மற்றும் 27 பணி யாளர்கள் என மொத்தம் 184 பேர் தங்கியிருப்பதும், அடிப்படை வசதிகளின்றி சுகாதாரமற்ற முறையில் அவர்கள் இருந்ததையும், 16 பேர் மாயமாகி இருந்ததையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இது குறித்து ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியதின் பேரில், முதற்கட்டமாக ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க ஆட்சியர் பழனி உத்தரவிட்டார்.
இதையடுத்து முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் ஆதரவற்றோர் இல்லத்துக்கு வந்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லத்தில் மனநலம் பாதிக்கப் பட்டிருந்த 120 பேரை 10 பேர் வீதம் தனித் தனி குழுவாக பிரித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வர வழைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி விக்கிரவாண்டி வட்டாட்சியர் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நாள்தோறும் 10 பேரை சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மனநல பிரிவு துறைத்தலைவர் டாக்டர் புகழேந்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித் தனர்.
ஆசிரமத்தில் தங்கியிருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நிறைவு பெற்றது. மருத்துவரின் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், அரசு வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு கொடுத்த புகார் உட்பட 2 புகார்களின் பேரில் பாலியல் வன்கொடுமை உட்பட 13 பிரிவுகளின் கீழ் கெடார் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆசிரமத்தின் ஊழியர்களான நரசிங்கனூரைச் சேர்ந்த அய்யப்பன் (31), பெரிய தச்சூரைச் சேர்ந்த கோபிநாத் (24), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி (35), கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த விஜி மோகன் (46) ஆகிய 4 பேரை நேற்று இரவு கைது செய்தனர்.
மனைவியுடன் மருத்துவமனையில் ஆசிரம நிர்வாகி: இவ்வழக்கில் தொடர்புடைய ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின் ஆகியோர் குரங்கு கடித்ததாக கூறி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT