

திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் முன் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சண்முக லட்சுமி ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே கன்னி மாநகரைச் சேர்ந்த விவசாயி பாண்டி(50). சிறுமலை அடிவாரப் பகுதியில் அவருக்குச் சொந்தமான நிலத்தை, பள்ளபட்டியைச் சேர்ந்த சிலர் மிரட்டி பறிக்க முயல்வதாக, சில மாதங்களுக்கு முன்பு பாண்டி மற்றும் அவரது மகன் சதீஷ்கண்ணன் ஆகியோர் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பாண்டி நிலக்கோட்டை நீதி மன்றத்தை நாடினார். இதை விசாரித்த நீதிமன்றம் வழக்குப் பதிய உத்தரவிட்டும், அம்மையநாயக்கனூர் போலீஸார் அலட்சியமாக காலம் தாழ்த்தினர். இதனால் மனமுடைந்த விவசாயி பாண்டி, கடந்த 7-ம் தேதி அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் சென்று விஷம் குடித்து மயங்கினார்.
அப்போது அவரை காப்பாற்ற முயலாமல் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமியும், போலீஸாரும் அலட்சியமாக இருந்துள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர், உயிருக்கு போரா டிய விவசாயி பாண்டியை தாமதமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து பாண்டி அளித்த புகாரில் அவரை மிரட்டிய சங்கர், நாச்சியப்பன், சின்னகருப்பு ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்குப் பதிவு செய்வதில் தாமதம் செய்ததால் விவசாயி உயிரிழந்தார் எனக் கூறி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க பாண்டியின் உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, தாமதமாக நடவடிக்கையில் இறங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், சில மணி நேரத்திலேயே அவரை ஆயுதப்படைக்கு மாற்றி திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவிட்டார். ஆனால், விஷம் குடித்து மயங்கி கிடந்த விவசாயியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காமல் அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாண்டியின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.