

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படும் ஹரியாணா கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 10-வது தெரு, தேனிமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் நேற்று (12-ம் தேதி) அதிகாலை ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டன. இதில், கலசப்பாக்கத்தைத் தவிர தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மூன்று ஏடிஎம் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. கண்காணிப்பு கேமராக்களை ஸ்பேரே அடித்து மறைத்துள்ளனர். அலாரங்களை செயலிழக்க செய்துள்ளனர். இது குறித்து தனித்தனியே வழக்குகள் பதிவாகின. விசாரணை அதிகாரியாக சம்மந்தப்பட்ட டிஎஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து டிஐஜி முத்துசாமி தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 தனிப்படைகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. ஏடிஎம் கொள்ளையில் வட மாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளது உறுதியான நிலையில், அவர்களுக்கு உள்ளூர் நபர்கள் உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் ஏஜென்சியைச் சேர்ந்த ஊழியர்களை, விசாரணை வளையத்தில் தனிப்படை காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் அதிகளவில் பணம் நிரப்பப்பட்டுள்ளதை கொள்ளை கும்பல் உறுதி செய்த பிறகுதான், கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இருக்கும் தகவலை கொள்ளை கும்பலுக்கு யாரோ ஒருவர் மூலமாக தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சந்தேகத்தின் அடிப்படையில், பணம் நிரப்பும் ஏஜென்சியின் ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களிடம் தனிப்படை காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கொள்ளை நடைபெற்றுள்ள அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐஜி கண்ணனின் சூசக தகவல்: இதற்கிடையில், திருவண்ணாமலையில் ஐஜி கண்ணன் இன்று(13-ம் தேதி) அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஜுன் மாதம் சென்னை உட்பட 22 இடங்களில் நடைபெற்ற ஏடிஎம் இயந்திர கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது, சென்னை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதானவர்கள் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளையிலும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளது உறுதியாகிறது. அவர்களை பிடிக்க தனிப்படையினர் ஹரியாணா விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, சென்னையில் 2021-ல் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்துள்ளவர்களுக்கும், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.