

ஓசூர்: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடந்ததைத் தொடர்ந்து தமிழக எல்லையில் போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் 4 ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளை போனது. இக்கொள்ளைச் சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என அம்மாவட்ட போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து, தமிழக எல்லை மற்றும் மாவட்ட எல்லைகளில் போலீஸார் உஷார் படுத்தப் பட்டு, வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர் ஜுஜுவாடி மற்றும் பூனப்பள்ளி, கக்கனூர், டிவிஎஸ் சோதனைச் சாவடிகளில் நேற்று டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இதனால், தமிழக - கர்நாடக மாநில தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடந்து சென்றன.
தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல, தமிழக- ஆந்திர மாநில எல்லையிலும் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப் பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.