

புதுச்சேரி: புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி. நகை வியாபாரி. இவரது மனைவி சாரதா (47). கடந்த 6-ம் தேதி குருமூர்த்தி தனது மகன்களுடன் நகைக்கடைக்கு சென்ற நிலையில், வீட்டில் சாரதா மட்டும் இருந்துள்ளார்.
அப்போது வீட்டில் மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதில் வீட்டில் உள்ள கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள், பொருட்கள், பாத்திரங்கள் என அனைத்தும், முதல் மாடி வரை யும் சேதமடைந்தன. தகவலறிந்த பெரியகடை போலீஸார் நேரில்சென்று சாரதாவை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சையில் இருந்த சாரதாவிடம் நீதிமன்ற நடுவர் வாக்கு மூலம் பெற்றார். அப்போது வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டு, வீடு முழுக்க அது பரவியதாகவும், கதவு மூடப்பட்டிருந்த நிலையில் அடுப்பை பற்ற வைத்த போது, எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும் சாரதா வாக்கு மூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சாரதா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வழக்கினை மாற்றி இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.