

சென்னை: சென்னையில் மாநகரப் பேருந்து சக்கரத்தில் சிக்கி ஐ.டி. பெண் ஊழியர் உயிரிழந்தார். சென்னை ஆயிரம் விளக்கு அஜீஸ் முல்க் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா (22). கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது அண்ணன் ரிஷிநாதன்(23). நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, தனது அண்ணனுடன் பிரியங்கா இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகேவந்தபோது, முன்னால் சென்ற மாநகரப் பேருந்தை முந்திச் செல்ல ரிஷி நாதன் முயன்றுள்ளார்.
அப்போது, எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், இவர்களது இருசக்கர வாகனத்தில் உரசியபடி சென்றதாக கூறப்படுகிறது. இதில், பிரியங்கா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த மாநகரப் பேருந்தின் சக்கரம் பிரியங்கா மீது ஏறி இறங்கியது.
படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய பிரியங்காவை அப்பகுதியில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரியங்கா உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், பிரியங்கா உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். எதிர் திசையில் வேகமாக வந்து விபத்து ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தை கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த விபத்தில் பிரியங்காவின் அண்ணன் ரிஷிநாதன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.