

சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் போலி பதிவெண் கொண்ட காரை கொள்ளையர்கள் பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான செல்போன் எண்களை வைத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் 2 மாடிகள் கொண்ட வீட்டின் 2-வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன்(60). அதில் முதல் தளத்தில் ‘ஜே.எல்.கோல்டு பேலஸ்’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையின் ஷட்டரை துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், நகை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து உடனடியாக திரு.வி.க.நகர் போலீஸாருக்கு ஜெயச்சந்திரன் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து வடசென்னை கூடுதல் காவல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ரம்யா பாரதி, துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்ட போலீஸார் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர்.
கொள்ளையர்கள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்கையும் தூக்கிச்சென்றதால், கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களா?: இதனால், அருகில் இருக்கும் கடைகள், எதிர்திசையில் இருக்கும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். சம்பவம் நடக்கும் முன்பு, அப்பகுதியில் ஒரு சொகுசு கார் கடையை நோட்டமிட்டதும், நள்ளிரவுக்குப் பிறகு கடையின் முன்னால் வந்து நின்ற அந்த காரில் இருந்து சிலர் இறங்கி நகைக்கடைக்கு செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும், சத்தம் வராத நவீன காஸ் வெல்டிங் கருவியைப் பயன்படுத்தி கடையின் ஷட்டரை ஒருவர் துளையிடுவதும், அந்த துளையின் வழியாக சிலர் உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு வெளியே வருவதும், பின்னர் அந்த காரில் ஏறி தப்பிச் செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
அவர்கள் வந்த காரின் பதிவெண்ணை போலீஸார் ஆய்வு செய்தபோது, அது போலியான பதிவெண் கொண்ட கார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் சென்ற வழித்தடத்தை போலீஸார் ஆய்வு செய்தபோது, அந்தக் கார், கோயம்பேடு வழியாக பூந்தமல்லி நோக்கி சென்றது. பின்னர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியைக் கடந்து கார் சென்றுள்ளது. இதனால் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் 6 தனிப்படை போலீஸார் வெளிமாநிலத்துக்கு விரைந்துள்ளனர். மேலும், கொள்ளைச் சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த செல்போன் டவரைப் பயன்படுத்தி, அந்த நேரத்தில் பதிவான செல்போன் எண்களைக் கைப்பற்றும் பணியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் பயன்படுத்திய போலி பதிவெண் கொண்ட கார்.