

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள 1,320 கிலோ பீடி இலைகளை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருச்செந்தூர் கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. திருச்செந்தூர் தாலூகா காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் திருச்செந்தூர்- காயல்பட்டினம் சாலையில் தனியார் பெண்கள் கல்லூரி எதிர்ப்புறம் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் நின்ற சரக்கு வாகனத்தை போலீஸார் சோதனை செய்தனர். இதில் பீடி இலை பண்டல்கள் இருந்தன. போலீஸாரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். ஓட்டுநரான திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த வின்சென்ட் மகன் தர்மராஜ் (44) என்பவர் மட்டும் போலீஸாரிடம் சிக்கினார். அந்த வாகனத்தில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் தலா 30 கிலோ எடை கொண்ட 44 சாக்கு பண்டல்களில் 1,320 கிலோ பீடி இலைகள் இருந்தன. அவைகளை இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் மற்றும் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்பு மேல் விசாரணைக்காக பீடி இலை பண்டல்கள், வாகனம் மற்றும் ஓட்டுநர் தர்மராஜை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.