

சென்னை: நகைக்கடையில் எந்த நேரத்தில் கொள்ளை நடைபெற்றுள்ளது என்று விசாரித்து வருவதாக கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல்.கோல்ட் பேலஸ் நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் வைத்து அறுத்து 9 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை கைது செய்ய 3 உதவி ஆணையர் தலைமையில், 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் காவல் கூடுதல் ஆணையர் அன்பு மற்றும் இணை ஆணையர் ரம்யா பாரதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் ஆணையர் அன்பு," கொள்ளை சம்பவம் நடந்த பிறகு அவர்களை குறை சொல்வதில் பிரயோஜனம் இல்லை. பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இது தொடர்பாக நடத்தப்பட்டுள்ளது.
பெடரல் வங்கி கொள்ளையின் போது அபாய ஒலி வெளியில் கேட்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். வரும் காலங்களில் மீண்டும் கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்க உள்ளோம். காவல் துறையினர் நள்ளிரவு 1.40 மணிக்கு இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளனர். இந்தப் பகுதியில் எப்போதும் வாகன சோதனை நடைபெற்று வரும். எந்த நேரத்தில் கொள்ளை நடைபெற்றது என்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம்." இவ்வாறு அவர் கூறினார்.