புதுச்சேரி அருகே கஞ்சா செடி வளர்த்து விற்ற வடமாநில தொழிலாளர் இருவர் கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருபுவனை அருகே உள்ள திருவண்டார்கோவில் ஏரிக்கரை சாலையில், வட மாநில தொழிலாளர்கள் வாடகை வீட்டில் தங்கி இருந்து, அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவ்வாறு வட மாநில தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில் அதிகப்படியான இளைஞர்கள் வந்து செல்வதாகவும், சில நேரங்களில் அங்கே இருக்கும் இளைஞர்கள் சிலர் போதையில் தள்ளாடுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் திருபுவனை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து திருபுவனை வழியாக திருவண்டார்கோவில் ஏரிக்கரைக்கு செல்லும் சாலையில் ஒரு வீட்டில் வட மாநில இளைஞர்கள் இருவரை போலீஸாரை பிடித்து விசாரித்ததில் வாடகை வீட்டின் பின்புறம் இருந்த சிறிய தோட்டத்தில் பல்வேறு பூக்கள் உள்ள செடிகளின் நடுவில், கஞ்சா விதைகளை தூவி அதனை செடிகளாக வளர்த்து வந்ததும், மேலும் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலம் மயூரா பஞ்சன் கிராமத்தைச் சேர்ந்த சர்பன்குமார் பெஹாரா (40), அதே பகுதியைச் சேர்ந்த தஷரத்பத்ரா (27) ஆகியோர் என்பதும், இவர்கள் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இந்த கஞ்சா செடிகளை வளர்த்தும், விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ஒரு அடி நீளம் வளர்ந்த கஞ்சா செடிகள், 100 கிராம் மதிப்பிலான கஞ்சாவை போலீஸார் கைப்பற்றினர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in