

காரைக்குடி: காரைக்குடி அருகே கல்லலில் டாஸ்மாக் கடைக்கு போட்டியாக அதன் அருகிலேயே மதுக்கடை நடத்திய 5 பேரை உதவி எஸ்பி கைது செய்தார்.
காரைக்குடி அருகே கல்லல் தெற்கு 3-வது வீதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லலில் வேறு இடத்தில் தனியார் மதுக்கூடம் நடத்த சிலர் அனுமதி பெற்றனர். விற்பனை குறைந்ததால், திடீரென அரசு டாஸ்மாக் கடை அருகிலேயே அவர்கள் மதுக்கடையை தொடங்கினர்.
மேலும் மது பாட்டில்களையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ததால், டாஸ்மாக் கடையின் விற்பனை சரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாஸ்மாக் அதி காரிகள் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காரைக்குடி உதவி எஸ்பி ஸ்டாலின் தலைமையிலான போலீஸார் டாஸ்மாக் கடைக்கு போட்டியாக செயல்பட்ட தனியார் மதுக்கடையில் சோதனையிட்டனர்.
விதிமீறி செயல்பட்டதை அடுத்து, அங்கிருந்த 7,500 மது பாட்டில்கள், ரூ.25 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுக்கடையை நடத்திய திருநாவுக்கரசு, வீரபத்திரன், பாலமுருகன், கருப்பையா, ஜான் போஸ்கோ, மாணிக்கவாசகம் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
இதில் திருநாவுக்கரசை தவிர மற்ற 5 பேரையும் கைது செய்தனர். டாஸ்மாக் கடையை விட குறைந்த விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ததால், மது பாட்டில்கள் போலியா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.