Published : 09 Feb 2023 06:45 AM
Last Updated : 09 Feb 2023 06:45 AM

கடலூரில் குடும்பத் தகராறு காரணமாக 2 குழந்தை உட்பட 3 பேர் எரித்து கொலை; தீ வைத்தவரும் உயிரிழப்பு

உயிரிழந்த தமிழரசி மற்றும் குழந்தைகள் ஹாசினி, லக்‌ஷ்.

கடலூர்: கடலூரில் விவகாரத்து தர மறுத்ததால் கோபமடைந்த இளைஞர் ஒருவர், தனது மனைவி, மைத்துனி மற்றும் மாமியார் மீது ஒரு சேரபெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் மைத்துனி மற்றும் 2 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். மனைவியும், மாமியாரும் பலத்ததீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த இளைஞரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதியழகன்–செல்வி தம்பதியரின் மூத்த மகள் தமிழரசி(31). இவர், கட்டிடத் தொழிலாளியான பிரகாஷ்(35) என்பவரை திருமணம் செய்து கொண்டு, கடலூர் செல்லங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார் கோயில் தெருவில் குடியிருந்து வந்தார். இவர்களுக்கு ஹாசினி என்ற 4 மாத குழந்தை இருந்தது.

தமிழரசியின் தங்கை தனலட்சுமி(27). இவர் கடலூரில் உள்ள தனியார் மருத்தவமனை ஒன்றில் வேலை பார்த்தபோது, அதே மருத்துவமனையில் லேப்டெக்னிஷியனாக இருந்த சிதம்பரம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் சற்குரு(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் கடலூர் தேவனாம்பட்டினத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு லக்‌ஷன் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.

விவாகரத்து கோரி வழக்கு: இந்நிலையில், சற்குருவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நட்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தனலட்சுமியிடம் விவாகரத்து கேட்டு சற்குரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனலெட்சுமி, சேர்ந்து வாழ விரும்புவதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து தனலெட்சுமி தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். தனலட்சுமி விவாகரத்து தராததால் அவர் மீது சற்குரு கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் தனலெட்சுமி குழந்தை லக்‌ஷன், தாய் செல்வியுடன் அவரது அக்கா தமிழரசி வீட்டுக்கு சென்றுள்ளார். பிரகாஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றிருந்தார். அப்போது, தனலட்சுமியிடம் போனில் தகராறு செய்த சற்குரு, பின்னர் பைக்கில் கையில் பெட்ரோல் கேனுடன் தமிழரசி வீட்டுக்கு வந்தார்.

அடுப்பில் பெட்ரோல்பட்டு பரவியது: அங்கு அவருக்கும் தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தனலட்சுமிக்கு ஆதரவாக தமிழரசி மற்றும் செல்வி பேசியுள்ளனர். இதில் இவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

அப்போது சற்குரு பெட்ரோல் கேனை திறந்து அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத் துள்ளார். வீட்டில் சமையல் நடந்து கொண்டிருந்தால் அடுப்பில் பெட் ரோல் பட்டு வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. அலறல் சத்தத்துடன் வீடு முழுவதும் புகை மண்டலமானது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தபோதும், தீப்பற்றி எரிந்ததால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீஸார் விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சற்குரு, தனலட்சுமி, செல்வி ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில், தமிழரசி, அவரது 4 மாத குழந்தை ஹாசினி, மற்றும் தனலெட்சுமியின் 6 மாத ஆண் குழந்தை லக்‌ஷன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 3 பேரின் உடல்களையும் போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சற்குரு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எஸ்.பி. சக்திகணேசன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x