

கோவை: கோவை மாவட்டத்தில் 46 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் துப்பாக்கியுடன் சுற்றிய மூவர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனையைத் தடுக்கவும், விற்பனைசெய்பவர்களை கைது செய்யவும் நேற்று காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், பேரூர், பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன்பாளையம் ஆகிய உட்கோட்டங்கள் வாரியாக டிஎஸ்பிக்கள் தலைமையில் மொத்தம் 46 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, ‘‘திடீர் சோதனையில், மொத்தம் 105 நபர்கள் கண்டறியப்பட்டனர். கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 28 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த 2 பேர், மேட்டுப்பாளையத்தில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடி பொருள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, காரமடையில் நடத்தப்பட்ட சோதனையின் போது நாட்டுத் துப்பாக்கியுடன் 3 பேர் பிடிபட்டனர்.
விசாரணையில். இவர்கள் காரமடையைச் சேர்ந்த ஷெட்டி சிங்(58), ராமராஜ்(30), வேலு(33) என்பதும், வனப்பகுதிகளில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட லாட்டரி சீடடுகளை விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், தொடர் குற்றத்தில் ஈடுபடும் 25 பேரிடம், குற்றத்தில் ஈடுபட மாட்டேன் என நன்னடத்தை பிணை உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டு, எச்சரித்து அனுப்பப்பட்டனர். இதுபோன்ற திடீர் சோதனை அடிக்கடி நடத்தப்படும்’’ என்றனர்.