ஊத்துக்குளியில் போலி மருத்துவர் கைது: கிளினிக்குக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்

ஊத்துக்குளியில் போலி மருத்துவர் கைது: கிளினிக்குக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் சர்க்கார் பெரியபாளையத்தில் கிளினிக் செயல்படுவதாகவும், அங்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஆட்சியர் சு.வினீத்துக்கு புகார் சென்றது.

இதையடுத்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணைஇயக்குநர் கனகராணி தலைமையில், திட்ட ஒருங் கிணைப்பாளர் அருண்பாபு, நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், அலுவலக கண்காணிப்பாளர் செ.ரமேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், அந்த கிளினிக்கில் ஆய்வு செய்தனர். அங்கு மருத்துவராக இருந்த அவிநாசியை சேர்ந்த ராஜா (44) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் மருந்தாளுநர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளாக அலோபதி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து கிளினிக்கை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். போலி மருத்துவர் ராஜா மீது ஊத்துக்குளி காவல் நிலையத்தில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கனகராணி புகார் அளித்தார்.

இதையடுத்து ராஜா கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி கூறியதாவது: தமிழ்நாடு மருத்துவ நிறுவன சட்டம்1997-ன்படி, அனைத்து மருத்துவ மனைகளிலும் பதிவுச் சான்றிதழ், மக்கள் மற்றும்நோயாளிகள் பார்வையில் படும்படி, மருத்துவர்கள் வைத்திருக்க வேண்டும்.

அலோபதி, சித்தா வழி உட்பட அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் இந்த சான்று அவசியம். இந்த சான்றுகள் இல்லாத மருத்துவமனைகள் மீது மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in