

திருச்சி: திருச்சியில் மேற்கு வங்க இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி, பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் மைலம் மகன் விக்ரம்(34). புத்தூர் அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள உணவகம் உட்பட பல்வேறு உணவகங்களில் கூலி வேலை செய்து வந்தார். இரவு நேரத்தில் கோட்டை ரயில் நிலையப் பகுதியில் தங்கியிருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்த விக்ரமை, 2 பேர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில், அந்த இடத்திலேயே விக்ரம் உயிரிழந்தார். இது தொடர்பாக கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், பெரியமிளகு பாறையைச் சேர்ந்த வரும், தற்போது கீழச் சிந்தாமணி காளியம்மன் கோயில் தெருவில்
வசித்து வருபவருமான வெந்த கை பாலா என்ற பால முருகன்(35) என்ற ரவுடி, இவரது மனைவி தீபிகா(35), நண்பர் சந்துக் கடை கணேஷ்(38) ஆகியோர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கோட்டை ரயில் நிலையப் பகுதியில் ஒன்றாக தங்கியிருந்தபோது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், பாலமுருகன் மது வாங்கி வருமாறு விக்ரமிடம் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
ஆனால், மது வாங்கித் தராமல் ஏமாற்றிய ஆத்திரத்தில் விக்ரமை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கோட்டை போலீஸார்3 பேரையும் கைது செய்தனர்.