

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட லத்தேரியில் அதிமுக பிரமுகர் எல்.எம்.பாபு என்பவரை முன் விரோதம் காரணமாக லத்தேரி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.
இதற்கிடையில், கொலை முயற்சி சம்பவத்தில் மெத்தனமாக செயல்பட்ட புகாரில் லத்தேரி காவல் நிலைய ஆய்வளராக பணியாற்றி வரும் விஸ்வநாதனை வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டார். ஆனால், வேலூர் டிஐஜி முத்துசாமி உத்தரவின்பேரில் ஆய்வாளர் விஸ்வநாதன் வேலூர் சரக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர், தப்பி ஓடிய குற்றவாளியுடன் செல்போனில் பேசியதாக புகாரும் கூறப்படுகிறது. அதேபோல், லத்தேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரங்கநாதன், வேலூர் ஆயுதப்படைக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் முதல் நிலை காவலர் வினோத் ஆகியோர் வேலூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தலைமை காவலர்கள் சந்திரசேகரன், தட்சிணாமூர்த்தி, முதல் நிலைய காவலர்கள் புகழேந்தி, சந்தோஷ், லோகேஷ்வரன், காவலர்கள் சந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் காட்பாடி காவல் நிலையத்துக்கும், முதல் நிலை காவலர் தீர்த்தகிரி காட்பாடி போக்குவரத்து பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், விரிஞ்சிபுரம் உதவி ஆய்வாளர் குமரன், காட்பாடி போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு, காட்பாடி பெண்கள் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சரஸ்வதி, மேல்பாடி தலைமை காவலர் கார்த்திகேயன், விருதம்பட்டு தலைமை காவலர் ராமமூர்த்தி, காட்பாடி காவலர் வெங்கடேசன், பள்ளிகொண்டா முதல்நிலை காவலர் பிரேம்குமார் ஆகியோர் லத்தேரி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
லத்தேரி காவல் நிலைய தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மணவாளன், தனிப்பிரிவு தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, திருவலம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், லத்தேரிக்கும், விரிஞ்சிபுரம் தனிப்பிரிவு காவலர் லோகேஷ், திருவலம் காவல் நிலைய தனிப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவுகளை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.