

கோவை: கோவை கே.ஆர்.புரத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். பீளமேடு பகுதியில் மின்மாற்றிகளுக்கான காப்பர் கம்பி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் இவரது நிறுவனத்தில் பூட்டு உடைத்து புகுந்த மர்ம நபர்கள் 1,440 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச் சென்றனர். புகாரின்பேரில், பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்தனர். காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் (தெற்கு) சிலம்பரசன் மேற்பார்வையில், சிங்காநல்லூர் சரக உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜோதிலிங்கம்(25), பாலக்காட்டைச் சேர்ந்த ஆனந்தகுமார்(27), திருப்பூரைச் சேர்ந்த அமீர்பாஷா(24), சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சூர்யா(23), பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபு (22), ஒண்டிப்புதூரைச் சேர்ந்த செந்தில்குமார் (32) மற்றும் 17 வயது இளைஞர், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ்(42), காரமடையைச் சேர்ந்த ஆனந்த் ஆகிய 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக துணை ஆணையர் சிலம்பரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘ஜோதிலிங்கம் பல்லடம் சாமிக்கவுண்டன்பாளையத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். திருட்டு சொத்துகளை வாங்கி இளைஞர் களுக்கு பணம் அளித்து வந்துள்ளார். அதன்படி, ஜோதிலிங்கம் தலைமையில் வந்த இவர்கள் காப்பர் கம்பிகளை திருடியுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும். இதையடுத்து 9 பேரும் கைது செய்யப் பட்டனர். திருடப்பட்ட கம்பிகள் மீட்கப்பட்டுள்ளன’’ என்றார்.