தருமபுரி | செங்கல் சூளை தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்திய புகாரில் 4 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தருமபுரி: காரிமங்கலம் அருகே செங்கல் சூளை உரிமையாளர் தொழி லாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய விவகாரத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பெரியாம்பட்டி ராமண்ணன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (33). இவரது தாயார் லட்சுமி (55). இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சரவணன் என்பவரின் செங்கல் சூளையில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

அப்போது, சொந்த தேவைக்காக சூளை உரிமையாளரிடம் ரூ.2.60 லட்சம் பணம் வாங்கியுள்ளனர். சூளையில் வேலை செய்வதன் மூலம் வாங்கிய கடனை கழிப்பதாகக் கூறி பணியாற்றி வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த பொங்கல் திருவிழாவின்போது முத்து, லட்சுமி இருவரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

அப்போது லட்சுமிக்கு உடல்நிலை பாதிப்படைந்ததால் அவர்களால் உடனடியாக செங்கல் சூளைப் பணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பணிக்கு வருமாறு போன் மூலம் சரவணன் கூறி வந்துள்ளார். பின்னர், நேற்று முன்தினம் இரவு சரவணன் உள்ளிட்ட சிலர் நேரில் வந்து, சூளைக்கு வேலை செய்ய வருமாறு அழைத்து லட்சுமியிடம் தகராறு செய்துள்ளனர்.

பின்னர் அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். கடைக்கு சென்றிருந்த முத்து இதையறிந்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி லட்சுமியை மீட்டனர். மேலும், கிருஷ்ணன், கோபி, பிரபு (24) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சூளை உரிமையாளர் சரவணனை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in