

சென்னை: சென்னை அம்பத்தூரில் வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்தபோது வெடித்ததில், ரவுடியின் கைகள் துண்டாகின. இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடியும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த வண்டலூர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கார்த்திக் (29). இவர் மீது 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் வசிக்கும் தனது கூட்டாளி விஜயகுமார்(32) வீட்டுக்குச் சென்ற கார்த்திக், வீட்டின் மாடியில் பட்டாசு மருந்துகளைக் கொண்டு, நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளார்.
அப்போது, திடீரென்று நாட்டுவெடிகுண்டு வெடித்ததில், கார்த்திக்கின் இரு கைகள், முகம், உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரை விஜயகுமார் மீட்டு, நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், கார்த்திக்கின் இரு கைகளும் துண்டாகின.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். கார்த்திக்கின் கூட்டாளி விஜயகுமாரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கார்த்திக்கைது செய்யப்பட்டார். அவருக்குஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.