

சேலம்: சேலம் சிவதாபுரம் அருகே கோயிலுக்கு வந்து சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு, இரு வாரங்களுக்கு முன்னர் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்து சென்றார். அவர் கோயிலில் இருந்தவர்களிடம் தகராறு செய்ததாகக் கூறி, திருமலைகிரி ஊராட்சித் தலைவரும் சேலம் வீரபாண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான மாணிக்கம் அவதூறாகப் பேசினார்.
இதையடுத்து, அவரை சேலம் இரும்பாலை போலீஸார், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, சேலம் நீதிமன்றத்தில் மாணிக்கம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், மாணிக்கத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதில், திருமலைகிரி கிராமத்துக்கு மாணிக்கம் ஒரு மாதம் வரை செல்லக் கூடாது. அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இருவேளையும் கையொப்பம் இட வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.