

திருப்பூர்: திருப்பூர் மாநகர் ஆயுதப்படை காவலர் ஹரிகிருஷ்ணன் திருமுருகன்பூண்டி அருகே விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: தேனி மாவட்டம் காமாட்சிபுரம் எஸ்.அழகாபுரியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(30). இவர் கடந்த 2017-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். திருப்பூர் மாநகர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்ததார். இவரது மனைவி கிருஷ்ணபிரியா. திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. தம்பதியர் திருப்பூர் சாமுண்டிபுரம் சிவசக்திநகரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் மாநகர் ஆயுதப்படை காவலர் ஹரிகிருஷ்ணன் போதை மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது. இதையடுத்து தேனியில் போதை பழக்கத்தில் இருந்து மீள சிகிச்சை எடுத்துள்ளார். இந்த நிலையில் திருப்பூரில் பணியாற்றிவந்தவர், வழக்கம் போல் மாநகரில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பணியாற்றுவதாக கூறிவிட்டு சென்றார்.
பின்னர் மனைவியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்ட ஹரிகிருஷ்ணன், தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி திருமுருகன்பூண்டி காவல் எல்லைக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் விஷம் அருந்தி உயிரிழந்தார். இது தொடர்பாக மனைவி அளித்த தகவலின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து ஹரிகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றினர்.