Published : 05 Feb 2023 04:13 AM
Last Updated : 05 Feb 2023 04:13 AM

வெளியூர் செல்லும் பொதுமக்களின் வீடுகளை ரோந்து போலீஸார் மூலம் கண்காணிக்கும் திட்டம்: சங்கர் ஜிவால் தகவல்

காவல் துறையால் மீட்கப்பட்ட பணம், நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால். படம்: ம.பிரபு

சென்னை: சென்னையில் பொதுமக்களிடம் திருடப்பட்ட பொருட்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஒப்படைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: சென்னையில் மொத்தம் ரூ.19 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள 6,643 பவுன் (53.2 கிலோ) நகைகள், ரூ.2 கோடியே 70 லட்சத்து 87,939 ரொக்கம், 1,487 செல்போன்கள், 425 இருசக்கர வாகனங்கள், 31 ஆட்டோக்கள் மற்றும் 18 இலகுரக வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துவதற்காக ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, பூட்டப்பட்ட வீடுகள் என்ற மற்றுமொரு புதிய திட்டம், சென்னைகாவல் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதை ‘இ-பீட்’ திட்டத்துடன் இணைத்துள்ளோம். இதற்காக, தேசிய குற்ற ஆவண காப்பகத்துடன் பேசி வருகிறோம். இத்திட்டத்தின்படி, வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு செல்பவர்கள், தங்கள் பயணம், வீடு தொடர்பான தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்துவிட்டுச் செல்லலாம்.

மேலும், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள காவல் துறைஇணையதளத்தில் பதிவு செய்துவிட்டால், அது தொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட இரவு ரோந்து போலீஸாருக்கு சென்றுவிடும். இதையடுத்து ரோந்து போலீஸார் தினமும் 3 முறை அந்த வீட்டை சோதனை செய்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

ஆன்லைன் குற்றங்கள்: இந்த திட்டத்தை ஒரு மாதத்துக்குள் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளோம். வரும் காலத்தில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தமுயன்று வருகிறோம். ஆன்லைன் சைபர் குற்றங்கள் 100 சதவீதம் அதிகரித்து வருகின்றன. 90 சதவீதகுற்றங்கள் பொதுமக்கள் அலட்சியத்தால்தான் நடைபெறுகின்றன. இவ்வாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x