

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் செக்காங்கன்னி எழில்நகரைச் சேர்ந்தவர் மும்தாஜ் பேகம்(44). இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் ஒரு பெண் உட்பட 3 பேர் வந்தனர். அவர்கள் மும்தாஜ் பேகத்தின் நன்மைக்காக மாந்திரீகம் செய்து தருவதாகக் கூறி, அவரிடம் இருந்து 1 பவுன் சங்கிலியை வாங்கியுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து, பூஜை முடிந்துவிட்டதாகக் கூறி, மும்தாஜ் பேகத்திடம் ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, அதை மறுநாள் பிரித்துப் பார்க்கும்படி தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது சந்தேகம் அடைந்த மும்தாஜ் பேகம் உடனடியாக பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தார். அதில், அவர்கள் உப்பை மடித்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மும்தாஜ் பேகம் அளித்த தகவலின்பேரில் கும்பகோணம் மேற்கு போலீஸார் அங்கு சென்று, பெண் உட்பட 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கொளம்பலூர் கோவில் அம்மன்பதி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன்(26), அவரது மனைவி ரேணுகாதேவி(28), உறவினர் விஜய்(21) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.