

திருச்சி: மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் 2,169 ரவுடிகளின் வீடுகளில் போலீஸார் சோதனை நடத்தி 271 பேரை கைது செய்தனர்.
மத்திய மண்டல காவல் துறைக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் ரவுடிகளின் நடவடிக்கையை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும் போலீஸாருக்கு ஐ.ஜி க.கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஜன.1-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு திருச்சி மாவட்டத்தில் 28, புதுக்கோட்டையில் 28, கரூரில் 26, பெரம்பலூரில் 9, அரியலூரில் 12, தஞ்சாவூரில் 49, திருவாரூரில் 52, நாகையில் 32, மயிலாடுதுறையில் 35 என 271 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சியில் 251, புதுக்கோட்டையில் 331, கரூரில் 137, பெரம்பலூரில் 85, அரியலூரில் 79, தஞ்சாவூரில் 387, திருவாரூரில் 394, நாகப்பட்டினத்தில் 282, மயிலாடுதுறையில் 223 என மத்திய மண்டலத்தில் 2,169 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, 51 வகையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் குற்ற வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் வாரண்ட் நிலுவையில் இருந்த 19 ரவுடிகளும், குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 779 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
ரவுடிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக 282 பேரிடமிருந்து நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்து, அவர்களில் 121 பேருக்கு பிணை ஆணை பெறப்பட்டுள்ளது.
அதேபோல, ஏற்கெனவே நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெற்ற 6 பேர், அதை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக திருச்சியில் 1, தஞ்சாவூரில் 1, திருவாரூரில் 9 என 11 ரவுடிகள் கடந்த ஒரு மாதத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய மண்டல ஐ.ஜி க.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகளின் நடமாட்டங்கள், செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ரவுடிகள் மீதுள்ள குற்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் மூலம் விரைந்து தண்டனை பெற்றுத்தர சிறப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படும் ரவுடிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.