Published : 03 Feb 2023 04:03 AM
Last Updated : 03 Feb 2023 04:03 AM

பொங்குபாளையம் விபத்து விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவுவது வதந்தி - திருப்பூர் எஸ்.பி. அலுவலகம் விளக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கு பாளையத்தில் வாகனத்தை இடித்த நபரிடம் தகராறில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் என நேற்று முன்தினம் வீடியோ வைரலாகிய நிலையில், அந்த வீடியோவில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த நபரின் விளக்கத்தை மாவட்ட காவல்துறையினர் நேற்று வெளியிட்டனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் சாலையில், 3 நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சிறிய வாகன விபத்து தொடர்பாக, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு பரவி வருகிறது.

இந்த சம்பவத்தில் சம்பத்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, பொங்குபாளையம் சாலையில் இருந்த வடமாநிலத் தொழிலாளர் மீது இடித்ததில் விபத்து ஏற்பட்டது. இதில், விபத்தில் விழுந்தவரின் அலைபேசி சேதமடைந்தது. அதை சரி செய்ய அவர்கள் கேட்ட உதவியை செய்துவிட்டு வந்துள்ளார். இதை அவரே வாக்குமூலமாக அளித்த வீடியோவை இணைத்துள்ளோம்.

ஆனால், சமூக வலைதளங்கள் மற்றும் வாட் ஆப் குழுக்களில் "பைக்கை பிடுங்கி அட்டகாசம், தமிழரை சுற்றி வளைத்துபணம் பறித்த வடமாநில கும்பல்”என தவறான பதிவுகளை பரப்புகிறார்கள். இந்த வதந்தியையாரும் நம்ப வேண்டாம். அது தவறானது. வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x