Published : 03 Feb 2023 06:39 AM
Last Updated : 03 Feb 2023 06:39 AM
சென்னை: மது போதையில் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். இது தொடர்பாக டிஎஸ்பி மகன் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் மறவக்காடு அத்திவெட்டி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (30). இவர், சென்னை நீலாங்கரை காவல் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணி அளவில் கடையை மூடிவிட்டு அதே பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மதன்குமார் மீதும், நடந்து சென்று கொண்டிருந்த ராமாபுரம் சங்கர் (50) என்பவர் மீதும் அடுத்தடுத்து மோதியது. இதில், மதன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கர் பலத்த காயம் அடைந்தார்.
விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் அடையாறு போக்குவரத்து போலீஸார் விரைந்து சென்று சங்கரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிந்துவிசாரித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது சென்னை தி.நகர் ராமகிருஷ்ணா தெருவைச் சேர்ந்த அன்பரசன் (28) என்பதும் காரில் இருந்தது அவரது நண்பர்கள் புதுச்சேரி ஆனந்த் (27), கன்னியாகுமரி பொறியாளர் ஹிட்லர் (23), மதுரை ஞானேஸ்வரன் (27) என்பதும் தெரியவந்தது.
அதிக மதுபோதையில் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, அன்பரசன் கைது செய்யப்பட்டார். இவரது தந்தை காவல் துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT