

திருப்பூர்: அவிநாசி அருகே தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி அருகே மங்கரசுவளையபாளையம் ஊராட்சி லூர்துபுரம் பிள்ளையார் கோயில் தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (86), இவரது மனைவி சரஸ்வதி (78). தம்பதியர் தோட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன். இதில் இளைய மகள் சாந்தி, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக தற்போது பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை தோட்டத்து வீட்டுக்குள் புகுந்த அடையாளம் இரண்டு மர்ம நபர்கள், கிருஷ்ணசாமியை இரும்பால் தாக்கி வீட்டிலிருந்த 7 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
மனைவி சரஸ்வதியை வீட்டில் இருந்த சேலையால கட்டி போட்டுள்ளனர். இதையடுத்து மர்ம நபர்கள் சென்றதும், கிருஷ்ணசாமி மனைவியை மீட்டு திருப்பூரில் உள்ள மகன் மற்றும் மகள்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சேவூர் போலீஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.