

மதுரை: மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
புகாரின் விவரம்: "மதுரை பெரியார் பேருந்து நிலையம் கென்னட் மருத்துவமனை எதிரிலுள்ள ரயில்வே கேட் அருகில் 1.81 ஏக்கரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வலைவீசி என்ற பெயரில் தெப்பக்குளம் மற்றும் காளக்கோயில் எனும் கோயிலும் இருந்தன. கரோனா காலத்திற்கு முன்பு வரை அங்கு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் சிவபெருமாள் - மீனாட்சியம்மன் இருவரும் ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று வலை வீசி தெப்பக்குளம் வந்து, மீன் பிடித்து திரும்பி கோவிலுக்கு செல்லும் திருவிளையாடல் நிகழ்வு நடைபெறுவது வழக்கமாக இருந்தது.
கரோனாவால் மூன்றாண்டாக அங்கு வலை வீசி மீன்பிடி லீலை நடக்கவில்லை. இதற்கிடையில், அங்கிருந்த தெப்பக்குளம் மற்றும் காளக்கோயிலை காணவில்லை. மாயமாக்கிவிட்டது போன்று உள்ளது. மேலும், அங்கே இருந்த சிவபெருமான், நந்தி விநாயகர் சிலைகளும் காணவில்லை. இதைக் கண்டு பக்தர்கள் அதிர்ந்துள்ளனர்.
இவ்வாண்டு தை மாதம் வலை வீசி திருவிழா நடத்த அவ்விடத்தில் முகூர்த்த கால் நட்டு விழா ஏற்பாடுக்கு தயாராகி இந்து சமைய அறநிலையத் துறை அதிகாரிகள் சென்றபோது, கோயில், தெப்பக்குளம் காணாமல் போனதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். காணாமல் போன வலைவீசி தெப்பக்குளம், காளக்கோயில் மற்றும் பழமையான சிவலிங்கம், நந்தி ,விநாயகர் சிலைகளை கண்டுபிடித்து பழமை மாறாமல் மீண்டும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்கவேண்டும்" என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.