

மதுரை: மதுரையில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இதில்,ரவுடிகள் உட்பட 5 பேரை கைது செய்துள்ள போலீஸார், தலைமைகாவலர் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(44). இந்து மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகி. எம்.கே.புரம் மெயின் ரோடு பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்த அவர் 10 மணியளவில் கழிப்பறைக்குச் சென்றபோது ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது.
தகவல் அறிந்த ஜெய்ஹிந்த்புரம் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் பெண் விவகாரத்தில் கூலிப்படை மூலம் இக்கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி மகாலட்சுமி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
காவல் ஆணையர் நரேந்திரன்நாயர் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை நடத்திய விசாரணையில், ரவுடிகள் திருச்செந்தூர் அடைக்கலபுரத்தைச் சேர்ந்த மாடு தினேஷ் (27), ஜெய்ஹிந்த்புரம் குட்டை அஜித்குமார் (25), பல்லு கார்த்திக் (26) மற்றும் புறா பாண்டி (26), அய்யப்பன் பூத்து முத்துப்பாண்டி (24), இருட்டு மணி (23), அய்யப்பன் (26), அவரது சகோதரியின் கணவர் ஹைதர்அலி (21), ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு தலைமைக் காவலர் ஹரிகரன்பாபு ஆகியோருக்கு கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் மாடு தினேஷ், குட்டை அஜித்குமார், பல்லு கார்த்திக், அய்யப்பன், புறா பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.19 ஆயிரம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறி முதல் செய்யப்பட்டன. மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: நகைக்கடை வைத்திருந்த மணிகண்டனுக்கும், காவலர் ஹரிகரன்பாபுவுக்கும் நட்பு இருந்துள்ளது. இதன்மூலம் காவலரிடம் ரூ.5 லட்சம் வரை மணிகண்டன் கடன் வாங்கினார். இப்பணத்தை பலமுறை கேட்டும் திருப்பி தராததால் பிரச்சினை ஏற்பட்டது. மேலும், காவலர் ஹரிகரன்பாபுவின் மனைவி, 2 பெண் குழந்தைகள் அவரை விட்டு பிரிந்து சென்றதற்கும் மணிகண்டனே காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹரிகரன் பாபு, மாடு தினேஷ் தலைமையிலான கூலிப்படையினர் மூலம் மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. இவ்வாறு போலீஸார் கூறினர்.