

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளில் திருட்டு, மோட்டார் பைக்குகள் திருட்டு என குற்ற சம்பவங்கள் நீண்டு வருகின்றன. அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு நாள்களில் 2 இடங்களில் பைக்குகள் திருட்டு, பழக்கடையில் திருட்டு, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கட்டித் தொழிலாளி கொலை என குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல் அஜித் (26). இவர் அதே பகுதியில் உள்ள மீன் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு முன்பு தனது பைக்கை நிறுத்திவைத்திருந்தார். நேற்று காலை பார்த்போது பைக் திருடுப்போயிருந்தது. இதேபோன்று, பந்தல்குடியை சேர்ந்தவர் பாலமுருகன் (29). மளிகை கடை நடத்தி வரும் இவரது பைக்கையும் மர்ம நபர்கள் நேற்று திருடிச்சென்றனர். இத்திருட்டு சம்பவங்கள் குறித்து பந்தல்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்திபட்டி அருகே பழக்கடையில் ரூ.5,400 ரொக்கம், பொருள்கள் திருட்டுப்போனது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களால் அருப்புக்கோட்டை பகுதியில் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. முக்கிய இடங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குடியிருப்புகள் உள்ள பகுதிகளிலும் போலீஸார் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடித்து கைதுசெய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.