Published : 01 Feb 2023 04:20 AM
Last Updated : 01 Feb 2023 04:20 AM

மதுரையில் தாய், மகன் தற்கொலை: பங்குச்சந்தை நஷ்டத்தால் விபரீத முடிவா?

மதுரை: மதுரை கரிமேடு பகுதியில் நேற்று பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் தாய், மகன் இறந்து கிடந்தனர். பங்குச்சந்தை நஷ்டத்தால் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த விபரீத முடிவா என போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை கோச்சடை நடராஜ் நகர் மல்லிகை தெருவைச் சேர்ந்த சேதுராமன் மனைவி விஜயலட்சுமி (72). இவரது மகன் உமாசங்கர் ( 46). இவர் பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி, 2 குழந்தைகள் குடும்ப பிரச்சினையால் பிரிந்து சென்றனர். இதனால் தேனியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். இதனிடையே அவரும் சில வாரத்துக்கு முன்பு தேனிக்கு சென்றாராம்.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக உமாசங்கர் மூலம் பணம் முதலீடு செய்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சில வாரமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் அவர்களது வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது.

அக்கம்பக்கத்தினர் கரிமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் தேனியிலிருந்த அவரது 2-வது மனைவி கவிதாவுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் பூட்டிய வீட்டின் கதவுகளை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகன் இருவரும் இறந்து கிடந்தனர். பங்குச் சந்தையால் ஏற்பட்ட நஷ்டம், பணப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என கரிமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x