

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசு பேருந்தில் பாலியல் தொல்லை தருவதாக ஓட்டுநர், நடத்துநர் மீது பள்ளி மாணவிகள் சிலர் புகார் தெரிவித்தனர்.
திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் 5 கி.மீ. தூரத்தில் உள்ள பி.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். சொக்கம் பட்டியிலிருந்து பேருந்து வசதி இல்லாததால் சுமார் 2 கி.மீட்டர் தூரம் நடந்து உடையனேந்தல் சென்று அங்கிருந்து திருச்சுழியிலிருந்து காரியாபட்டி செல்லும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் செல் கின்றனர்.
அதேபோல், மாலையில் இதே வழியில் வீடு திரும்புகின்றனர். 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சொக்கம்பட்டியிலிருந்து பி.புதுப்பட்டிக்கு சென்று படித்து வருகின்றனர்.
இந்நிலையில், சொக்கம்பட்டியிலிருந்து உடையனேந்தல் செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்து அடைத்துள்ளதாகவும், இதனால், உடையனேந்தல் செல்வதற்கு நேர்வழி இல்லாமல் வயல்காட்டுப் பாதையில் சுற்றிவர வேண்டி உள்ளதாகவும், எனவே, சொக்கம்பட்டியிலிருந்து பேருந்து வசதி ஏற்படுத்தித்தரக் கோரி விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை நேற்று 2 மாணவர்களும் 15 மாணவிகளும் முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவிகள் கூறுகையில், "சொக்கம்பட்டியிலிருந்து உடையனேந்தல் செல்லும் சாலையை தனியார் சிலர் ஆக்கிமிரத்து தடுப்பு அமைத்துள்ளனர். இதனால், அருகே உள்ள ஓடையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
ஓடையில் தண்ணீர் வரும் போது அதில் இறங்கி நனைந்துகொண்டை கடந்துசெல்கிறோம். சிறுவர்,சிறுமியர்களை தூக்கிக்கொண்டுதான் செல்கிறோம். அதோடு, திருச்சுழியிலிருந்து காரியாபட்டி நோக்கிச் செல்லும் அரசு பேருந்தில்தான் உடையனேந்தலிலிருந்து பி.புதுப்பட்டிக்கு சென்று வருகிறோம்.
பேருந்தில், ஓட்டுநரும் நடத்துனரும் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். அதோடு, சில்மிஷத்திலும் ஈடுபடுகினறனர். எனவே, சொக்கம்பட்டியிலிருந்து பி.புதுப்பட்டிக்கு செல்லும் வகையில் நேரடியாக பேருந்து வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.