கனடாவில் பணிபுரிய விசா வழங்குவதாக கூறி மோசடி - ரூ. 8 லட்சம் இழந்தவர் அகமதாபாத் போலீஸில் புகார்
அகமதாபாத்: கனடாவில் பணிபுரிவதற்கான விசா வழங்குவதாகக் கூறி அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் இதுகுறித்து இணையதள குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் தைச் சேர்ந்த சிராக் சர்மா (30) கடந்த ஆண்டு ஜூலை 25-ம் தேதி ஒரு விளம்பரம் பார்த்துள்ளார். அதில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்களில் பணிபுரிவதற்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் அதற்கு மாதம் ரூ.2.5 லட்சம் சம்பளம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த சர்மா அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய டி.கே.படேல் என்பவர் கனடாவில் வேலை கிடைப்பது உறுதி என தெரிவித்துள்ளார்.
இதற்காக பாஸ்போர்ட் விவரங்களை கேட்டுள்ளார். அத்துடன் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகை இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அப்போது தன்னிடம் எச்டிஎப்சி வங்கியில் கணக்கு இருப்பதாக சர்மா கூறியுள்ளார். ஆனால் ஐடிஎப்சி வங்கியில்தான் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்று படேல் கூறியுள்ளார். இதையடுத்து ஐடிஎப்சி வங்கியில் புதிய கணக்கு தொடங்கிய சர்மா, அதில் ரூ.8 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார். மேலும் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்யுமாறு சர்மாவிடம் படேல் கூறியுள்ளார். அதற்கு தன்னிடம் மேற்கொண்டு பணம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரூ.3 லட்சத்தை தான் டெபாசிட் செய்வதாகக் கூறிய படேல், சர்மாவின் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு பெற்றுள்ளார்.
பின்னர் பணிபுரிவதற்கான விசா நடைமுறைகளை மேற்கொள்வதற்காக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு சர்மாவிடம் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, டீம் வியூவர் குயிக் சப்போர்ட்டை பதிவிறக்கம் செய்யுமாறு கூறிய படேல், குறியீட்டு எண்ணை கேட்டு பெற்றுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.7.96 லட்சம் எடுக்கப்பட்டதை அறிந்து சர்மா அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு படேலின் செல்போன் எண் அணைக்கப்பட்டது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து அகமதாபாத் இணையதள குற்றப் பிரிவு போலீஸில் சர்மா புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில், படேல் மீது தகவல் தொழில்நுட்பத்துறை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
