

ஆவடி: ஆவடி அருகே உள்ள பொத்தூர் - பொதிகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா. இவர் தன் பெயரில் வாங்கிய நிலத்துக்கு பட்டா கோரி, கடந்த 2012 ஜன.9-ல், அப்போதைய பொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கந்தசுவாமியிடம் மனு அளித்தார். அதற்கு அவர், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சுலோச்சனா, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை பிரிவு 1- போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, போலீஸாரின் ஆலோசனைப்படி, ரசாயணம் தடவிய ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக சுலோச்சனா கந்தசுவாமியிடம் அளித்தார். அப்போது, அவரை கையும் களவுமாக போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி இரா.வேலரஸ் அளித்த தீர்ப்பில், லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கந்தசுவாமிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.